இலங்கையின் நீதிப் பொறிமுறையில் நம்பிக்கை இழந்த காரணத்தினாலேயே சர்வதேச விசாரணையை கோருகின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் சிறுபான்மையின மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதில் நீண்டகால இழுத்தடிப்புக்கள் காணப்படுகின்றன. இதனாலேயே மோசமான குற்றங்களுக்கு நீதியைப் பெற்றுக் கொள்ள சர்வதேச நீதிமன்ற தலையீட்டைக் கொண்ட விசாரணைகளைக் கேட்கின்றோம்.
இலங்கையின் நீதித்துறை சுயாதீனமாக இல்லை என்பதை ஆட்சி செய்தவர்களும் முன்வைக்கும் விமர்சனங்களில் இருந்தே வெளியாகிவிட்டன.
நாட்டில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை. எமது மக்களின் பிரச்சினைகள் மேலெழுகின்ற போது நீதி அமைச்சர் டுவிட்டர் மூலம் கருத்துக்களை இடுவதை மாத்திரமே செய்துவருகிறார். அதனை மாத்திரமே அவரால் செய்ய முடியும்.
நாட்டில் மோசமான சர்வதேச குற்றங்கள் பல இடம்பெற்றுள்ளதாலேயே சர்வதேச விசாரணைகளைக் கேட்கின்றோம். அதனை வேண்டாம் எனக் கூற முடியாது, என்றார்.





