வடக்கு கிழக்கு இணைப்பை முக்கியத்துவப்படுத்துகின்ற முல்லைத்தீவை இடை நடுவில் கூறுபோட்டு சிதைக்கின்ற நோக்கோடு இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பேச்சாளரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பிட மாணவர் ஒன்றிய உப தலைவருமான தர்ஷன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு – அக்கரைவெளி நில அபகரிப்பிற்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால் நேற்று முன்தினம்(31) போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்,
இந்த நாட்டிலே தற்பொழுது நிலங்கள் பிற நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அண்மையில்கூட அம்பாந்தோட்டையில் சீன கடற்படை முகாம் அமைப்பதற்காக நிலங்கள் தாரைவார்க்கப்படுகின்றன. இவ்வாறாக பிற நாடுகளுக்கு(NewsCut.lk) போட்சிட்டி, அம்பாந்தோட்டை போன்ற துறைமுகங்களை தாரைவார்க்கும் இந்த அரசாங்கம் தாம் அபகரித்த தமிழர்களுடைய பூர்வீக நிலங்களை மீள ஒப்படைக்க மறுத்துக் கொண்டிருக்கின்றது.
தமிழர்களுடைய நிலங்கள் கடற்படை, வான்படை, தரைப்படை ஆகிய இலங்கை அரசின் முப்படைகளினால் அபகரிக்கப்படுகிறது. இவற்றைவிட தொல்லியல் திணைக்களத்தின் பௌத்தமயமாக்கல் செயற்பாட்டின் ஊடாக தமிழர்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தற்பொழுது அக்கரைவெளி பகுதியில் ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினால் அமைச்சரவையின் முடிவினையும் மீறி அபகரிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களுடைய நிலங்களை பறிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றமை தெட்டத்தெளிவாக தெரிகின்றது.
வடக்கு கிழக்கு இணைப்பை முக்கியத்துவப்படுத்துகின்ற முல்லைத்தீவை இடை நடுவில் கூறுபோட்டு சிதைக்கின்ற(NewsCut.lk) நோக்கோடு இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்புகள் நிறுத்தப்பட வேண்டும். இல்லையெனில் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் மாணவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்துவார்கள் என்பதனை கூறிக்கொள்கிறேன்.
மேலும் பிற நாடுகளுக்கு நிலங்களை தாரைவார்ப்பதற்கு இந்த அரசாங்கம் காட்டுகின்ற ஆர்வத்தை தாம் ஆக்கிரமித்த தமிழர்களுடைய காணிகளை விடுவிப்பதிலும் காட்ட வேண்டும், எனத் தெரிவித்தார்.(NewsCut.lk)





