வெளிநாட்டு கொள்கை தொடர்பாக அரசு அதிகமான கவனத்தை செலுத்த வேண்டும்

அரசு வெளிநாட்டு கொள்கை தொடர்பாக அதிகமான கவனத்தை செலுத்த வேண்டும் என தேசிய அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய ஏற்பட்டாளர் அன்ரனி யேசுதாசன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம்(21) யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச மீனவர் தினத்தை கொண்டாடுகின்ற போது அகில உலக ரீதியாக வாழ்கின்ற மக்களுக்கு புரதச்சத்தை வழங்கிக் கொண்டிருக்கின்ற மீனவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து நிற்கின்றோம். அதுமட்டுமல்ல மீனவர் பெண்களுக்கும் எங்களுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து நிற்கின்றோம்.

அதே நேரம் இலங்கையை பொறுத்தவரையில் இன்றைய மீனவர் தினத்தை கொண்டாடுவதற்கு மீனவர்களால் முடியுமா? சந்தோசமாக அவர்களால் கொண்டாட முடியுமா என்கின்ற ஒரு கேள்வி இருக்கின்றது, காரணம் உங்களுக்கு தெரியும் அரசாங்கம் கொண்டு வந்திருக்கின்ற மீனவர்களுக்கு உரிய சட்டமானது சிறு மீனவர்களுடைய வாழ்வை பாதிக்கின்ற, அவர்களுடைய தொழிலை இல்லாத செய்கின்ற, அவர்களுடைய வளங்களை பாதிக்கின்ற, வளங்களை சூறையாடுகின்ற ஒரு சட்டமாக இருக்கின்றது.

ஆக இந்த சட்டம் தொடர்பாக அமைச்சர் டக்லஸ் தேவானந்தா உட்பட, ராஜாங்க அமைச்சர் உட்பட அரசு இதைக் கவனத்தில் கொண்டு மீனவர்களோடு கலந்துரையாடி உடனடி மறுசீரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அடுத்தபடியாக நாங்க பார்க்கின்றோம் இன்று இலங்கை முழுவதும் பல்வேறுபட்ட சட்டவிரோதமான தொழில் முறை பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் இலங்கை அரசு சாதகமான தீர்வுகளை எடுப்பதில்லை,

இலங்கையில் எத்தனையோ சட்டங்கள் இருக்கின்றன 1996 இலக்கம் இரண்டு சட்டம் இருக்கின்றது, 2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம் இருக்கின்றது, 2018 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம் இருக்கின்றது, இப்படி பல சட்டங்கள் இருந்த போதிலும் சட்டவிரோதமான மீன்பிடியினாலே மீனவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது,

அடுத்து ஒரு முக்கியமான விடயம் இந்திய மீனவர்களுடைய வருகை தொடர்ச்சியாக பலமுறை இதை நாங்கள் பேசி வந்திருக்கின்றோம். பலமுறை அரசன் சிவில் அமைப்புகளும் கலந்துரையாடலை நடத்தியும் சாதகமான தீர்வு ஒரு நிரந்தரமான தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை, ஆயிரக்கணக்கான படகுகள் வருகின்ற போது எங்களுடைய கடற்படையினர் இரண்டு அல்லது மூன்று படகுகளை கைது செய்கின்றார்கள், மீனவர்களை கைது செய்கின்றார்கள் பிறகு இந்த பிரச்சினை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது, இலங்கையில் வாழுகின்ற குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இன்னமும் அந்த வடுக்களில் இருந்து மீள முடியாத வடபகுதி மீனவர்களுடைய வாழ்வில் முழுமையாக பாதித்து நிற்கின்றது.

ஆகவே இதற்கு ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் சொல்லுகின்றோம். நேற்று முன்தனால் இந்திய மீனவர்கள் அதனுடைய அமைச்சர்களை சந்தித்து இருக்கின்றார்கள் அவர்கள் இங்கு பாதிக்கப்படுவதாக சொல்லி இருக்கின்றார்கள். ஆனால் மற்றும் முழுதாக பாதிக்கப்படுவது எங்களுடைய நாட்டு மீனவர்கள்.

ஆகவே அரசு இந்த வெளிநாட்டு கொள்கை தொடர்பாக அதிகமான கவனத்தை செலுத்த வேண்டும், அதே நேரம் வடக்கு கிழக்கு பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவருடைய அநேகமான காணிகள் ராணுவ மயமாக்கப்பட்ட நிலையில் இருக்கின்றது, மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள், ஆகவே அவர்களுக்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டும், காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், 1990 ஆம் ஆண்டிலிருந்து இடம்பெயர்ந்து வாழுகின்ற அநேக மக்களுடைய காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாது இருக்கின்றது இந்த காணிக்காலம் விடுவிக்கப்பட வேண்டும் என இன்றைய நாளிலே நாங்கள் கூறிக் கொள்ள விரும்புகின்றோம் என தெரிவித்தார்.