யாழ் பல்கலையில் முதலாவது சர்வதேச கல்வியல் மாநாடு ஆரம்பம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்வதை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாடு இன்றைய தினம் இடம்பெற்றது.

‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து இவ் மாநாட்டை ஒழுங்கமைத்துள்ளன.

இவ் மாநாடானது இன்றும் (20)ம் நாளையும்(21) காலை மற்றும் மாலை அமர்வுகளாக நடைபெறுகின்றது. இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறுகின்றன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு இடம்பெறுகின்றது.

இந் நிகழ்வில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன், வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ், விரிவுரையாளர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.