பல கட்சிகள் எனக்கு ஆசனம் வழங்கத் தயாராக இருந்தன. ஆனால் எனது அரசியல் பயணம் அறவழியாக இருக்க வேண்டும் என்பதால்தான் சுயேட்சையாக களமிறங்கியுள்ளேன் என யாழ். தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சைக் குழு – 02 இன் ஊஞ்சல் சின்னத்தில் போட்டியிடும் சட்டத்தரணி ஈ.எஸ்.பி.கமலரூபன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எனது அரசியல் பிரவேசம் நேர்மையாக இருக்க வேண்டும். அறவழி சார்ந்த பயணமாக இருக்க வேண்டும். சில கட்சிகளில் நேற்று கட்சியில் இணைந்தவர்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு விளையாட்டு வீரனாக எனக்கு அனுபவம் உண்டு, ஒரு வீரனை நீக்கிவிட்டு, அந்த இடத்திற்கு புதியவர் வரும்போது, அது அவரைப் பெரிதும் பாதிக்கும்.
ஆகவே அவ்வாறான ஆசன ஒதுக்கீடு எனக்குத் தேவையில்லை. எனது அரசியல் அறவழியாக இருக்கவேண்டும் என்பதால்தான் சுயேட்சையாக இறங்கியுள்ளேன். ஒரு கட்சியின் தலைவர், அல்லது குழுவின் தலைவர் சுய ஒழுக்கத்துடன் இருக்கும்போதே அவர்களின் கீழ் உள்ளவர்களும் சுய ஒழுக்கத்துடன் இருப்பார்கள்.
தமிழர்களுக்கு வாக்களிக்காவிட் டால் அவர்கள் தமிழர்கள் இல்லை எனச் சொன்னார்கள் இதா பண்பு? இளையோரை சுயஒழுக்கங்களுடன் நல்வழிபடுத்த வேண்டும்.
அதனால்தான் அறவழி அரசியல் பயணத்திற்கு சுயேட்சைக் குழுவே எனக்கு முக்கிய தெரிவாக இருந்தது. எனது அரசியல் பயணமானது 30 வருடங்களுக்கு மேலாக இருக்கும் என நம்புகிறேன். இரண்டு வருடங்களின் பின்னர், கட்சிகளுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் முடிவெடுப்பேன்.
இந்தப் பாராளுமன்றத் தேர்தலின் போது கூட பல கட்சிகள் எனக்கு அழைப்பு விடுத்தன. வாய்ப்புக்கள் இப்படிக் கதவைத்தட்டாது எனக் கூறினார்கள். நான் சொன்னேன் வாய்ப்புக்களை எனக்கு உருவாக்கி கொள்ளத் தெரியும் என்று.
கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட இருந்தேன். எனது இலக்கு, உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு உள்ளூராட்சி உறுப்பினரான பின்னர் மக்கள் சேவைகளைச் செய்த பின்னர் 2024 அல்லது 2025ஆம் ஆண்டு களில் பாராளுமன்றத் தேர்தல் வரும் போது அதில் மக்கள் அறிந்த வேட்பாளராகக் களமிறங்க இருந்தேன். அதுதுரதிரஷ்டவசமாக உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவில்லை.
இந்தத் தேர்தலில் எமக்கு இரண்டு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றால், சுழற்சி முறையில் ஏனையவர்களுக்கு ஆசனங்களை வழங்குவேன்.
தென்மராட்சி, வடமராட்சி, கிளிநொச்சி போன்ற தேர்தல்த் தொகுதி மக் களுக்கு ஒரு பிரதிநிதித்துவம் இல்லை. அதேபோன்று பெண்களுக்குமான பிரதிநிதித்துவம் இல்லை. அவர்களுக்கு சுழற்சி முறையில் ஆசனங்களை வழங்க முடியும்.
எமது தேர்தல் விஞ்ஞாபனம் தீபாவளி அன்று வெளியிடப்படும். அதில் முக்கியமான ஐந்தம்சக் கோரிக்கை உள்ளடக்கப்பட உள்ளன,என தெரிவித்தார்.






