வறுமைக்கோட்டுக்குட்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக தேர்தலின் போது வாக்குறுதியளித்த போதிலும், தற்போதைய ஜனாதிபதி தேர்தல் வாக்குறுதிகளைக்கூட மீறியுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொலன்னாவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியதாவது,
ஜனாதிபதித் தேர்தல் மேடையில் வரிகளை குறைப்பதாக அநுரகுமார திசாநாயக்க கூறியதாகவும், சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்படிக்கையை மாற்றியமைக்க முடியவில்லை எனவும் சஜித் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத ஜேவிபி இற்கு பெரும்பான்மையை வழங்குவதற்கு பதிலாக ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்க வேண்டியது நாட்டின் தேவையாகும்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், தேங்காய்களுக்குக் கூட வரிசைகள் இருப்பதாகவும் சஜித் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி நாட்டை சிக்கலில் ஆழ்த்தியுள்ளதுடன், 2028 ஆம் ஆண்டு முதல் கடனை செலுத்துவதாக உறுதியளித்துள்ளார், அதன்படி இன்னும் நான்கு வருடங்களில் கடனை செலுத்த ஆரம்பிக்க வேண்டும்.
இந்த கடனை செலுத்துவதற்கு நாட்டின் தற்போதைய பொருளாதாரம் தாங்க முடியாது எனவும், அதற்கு விரைவான பொருளாதார வளர்ச்சி தேவை எனவும், அதற்கு இந்த அரசாங்கத்திற்கு திறன் இல்லை எனவும் தெரிவித்தார்.
இந்தக் கடனை அடைக்க, பெரும்பான்மையான ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்களை பாராளுமன்றத்திற்கு நியமிக்க வேண்டும், இல்லையெனில் 2028இல் நாடு திவாலாகிவிடும்.
ஐக்கிய மக்கள் சக்தி சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி மக்களுக்கு ஏற்ற ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முடியும் எனவும் வரிசை யுகத்திற்கு பதிலாக அபிவிருத்தி யுகத்தை உருவாக்கும் நாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும் சஜித் மேலும் தெரிவித்தார்.





