இன்று முதல் ஊரடங்கு தளர்வு! சுகாதார நடைமுறைகள் அடங்கிய புதிய வழிகாட்டி

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது இன்று(01) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது. இந் நிலையில், எதிர்வரும் காலங்களில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகள் அடங்கிய சுகாதார வழிகாட்டி நேற்று வெளியிடப்பட்டது.

சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தனவின் கையெழுத்துடன் இந்த வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, மறு அறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை நாடளாவிய ரீதியில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அத்தியாவசியமற்ற தேவைகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் மறு அறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை உற்சவங்கள், கேளிக்கை நிகழ்ச்சிகள், விருந்துபசார நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று(01) முதல்முதல் எதிர்வரும் 15ம் திகதி வரை பதிவு திருமணங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அந்த திருமண நிகழ்வுகளில் 10 பேருக்கு மாத்திரமே கலந்துக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்து சேவைகள் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை அழைத்து செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு பஸ்களில் யன்னல்களை திறந்து செல்லவேண்டியது அவசியம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனிமனித இடைவெளி பேணுதல், கைகளை அடிக்கடி கழுவுதல் மற்றும் முகக்கவசங்கள் அணிவது கட்டாயம் உள்ளிட்ட பல விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)