ஜேர்மனியில் ஹிட்லரை நினைவுகூர முடியாது! இலங்கையில் புலிகளை நினைவுகூர முடியாது – சரத் வீரசேகர

தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை இலங்கையில் நினைவுகூர ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் தியாகதீபம் திலீபனை நினைவுகூரச்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். மேலும் இரண்டு யுவதிகளின் கையடக்கத் தொலைபேசியையும் பொலிஸார் பறித்துச் சென்றமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இது குறித்து கொழும்பில் இன்றைய தினம் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர,பொலிஸார் செய்த செயலை நியாயப்படுத்தி கருத்து வெளியிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“திலீபன் என்பவரை நினைவுகூரும் நிகழ்வு நடந்தது. கொரோனா நெருக்கடி மத்தியில் வெளியே நடமாடவும் அதேபோல விடுதலைப் புலிகளை நினைவுகூர அனுமதிக்க முடியாது. இதுபோன்ற நிகழ்வில் கலந்துகொண்டவர்களையே பொலிஸார் அங்கிருந்து வெளியேற்றினார்கள்.

திலீபன் நிகழ்வில் இரண்டு யுவதிகள் ஊடகப் பெயரைப் பயன்படுத்தி பங்கேற்றிருந்தனர். இறுதியில் ஊடக அடையாள அட்டையை கோரியபோது அவர்களால் அதனை சமர்ப்பிக்க முடியாமற்போனது. உண்மையில் அவர்கள் ஊடகவியலாளர்கள் அல்லர்.

அதன்பின்னர்தான் அவர்களது கையடக்கத் தொலைபேசியை பொலிஸார் கையகப்படுத்தினர். அதற்கெதிராக அவர்கள் கூச்சல் எழுப்பினார்கள். அவர்களின் செயற்பாடு பொலிஸாராது கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவே இருந்தது.

அந்த சம்பவம் பற்றி அறிக்கையை நான் கேட்டுள்ளேன். சட்டத்தை சரிவர நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். அந்த இடத்தில் ஆங்கிலத்தில் உரத்த குரலாய் ஒருவர் கருத்து வெளியிட்டார். அவரையும் கடமைகளுக்கு இடையூறு செய்த குற்றச்சாட்டில் கைது செய்திருக்க வேண்டும்.

எனினும் குறித்த யுவதிகளை பொலிஸார் இடையூறு செய்யவில்லை. அவர்கள்தான் திலீபனின் நினைவுகூரலில் பங்கேற்றிருந்தனர். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தவன். அங்கு தமிழீழ விடுதலைப் புலிகள் செய்த விடயங்கள் எனக்குத் தெரியும்.

மாணவர்களை இழுத்துச் சென்றமை, பிள்ளைகளை இழுத்துச் சென்றமை, வரி செலுத்துவோருக்கு ஏற்பட்ட அழுத்தங்கள் என பல விடயங்களை அவதானித்தேன்.

இந்நிலையில் போரில் உறவினர்கள் உயிரிழந்திருந்தால் வீட்டில் வைத்து விளக்கு ஏற்றி அவர்களை அஞ்சலிக்கலாம். ஜேர்மனியில் ஹிட்லரை நினைவுகூர முடியாது. அந்த வகையில் விடுதலைப் புலிகளை நினைவுகூர நாம் இடமளிக்கமாட்டோம் எனத் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)