யாழ் பல்கலையின் வில்வம் பழ யோகட் உற்பத்தி உரிமம் தனியாருக்கு கையளிப்பு

யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தினால் உருவாக்கப்பட்ட வில்வம் பழத்தின் குணநலனைக் கொண்ட யோகட் பானத்துக்கான உற்பத்தி உரிமத்தினை உள்ளூர் நிறுவனம் ஒன்றிற்கு கையளிக்கும் நிகழ்வு இன்று(08) யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

வில்வம் பழ யோகட் பானத்தின் கண்டுபிடிப்பாளர் உரிமத்தைக் கொண்டிருக்கும் யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தின் சார்பில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவும், உற்பத்தி உரிமத்தைப் பெற்றுக்கொண்ட முல்லை பால் பொருள் உற்பத்தி நிறுவனத்தின் சார்பில் அதன் நிறுவனர் சி.தவசீலனும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு, ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது யாழ் பல்கலைக்கழக விவசாய பீடாதிபதி கலாநிதி சீ.வசந்தருபா, பயிரியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரும், தொழில் நுட்ப பீடத்தின் பீடாதிபதியுமான பேராசிரியர் திருமதி சி. சிவச்சந்திரன், வணிக இணைப்பு அலகின் பணிப்பாளர் கலாநிதி த.ஈஸ்வரமோகன், பல்கலைக் கழக நிதியாளர் கே. சுரேஸ்குமார், முல்லை பால் உற்பத்தி நிறுவன ஆலோசனை சபை உறுப்பினர் பேராசிரியர் எஸ். கணேஷ்ராஜா, யோகட் பான கண்டுபிடிப்பாளர் சே.ஆனந்த்குமார் மற்றும் அவரது குழுவினரும் கலந்து கொண்டனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)