இந்தியாவை கேந்திரமாகக் கொண்டு பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுக்கும் ISIS அமைப்பின் உறுப்பினர் ஒருவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி, இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 702 இலங்கையர்களிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸ் பயங்கரவாத தடுப்பு மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகேவிடம் நேற்று(01) இது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்திய அரச புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட மொஹமட் சம்சுதீன் என அழைக்கப்படும் ISIS அமைப்பின் நீண்டகால உறுப்பினரினுடைய WhatsApp கணக்கை சோதனைக்கு உட்படுத்திய போதே, குறித்த 702 `இலங்கையர்கள் தொடர்பில் தகவல்கள் வௌியாகியுள்ளன.
கடும்போக்குவாதியான சஹரான் ஹாசிம் நடத்திய போதனைகளின் குரல் பதிவுகள் மற்றும் நிழற்படங்கள் என்பன குறித்த WhatsApp கணக்கில் அடங்கியுள்ளதாக பொலிஸ் பயங்கரவாத தடுப்பு மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
சந்தேகநபர்கள் 702 பேரில் ஒருவரான மொஹமட் தவ்சான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ISIS பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் ஏப்ரல் 21 தாக்குதலில் அவரின் பங்களிப்பு குறித்து விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





