கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான முதலாவது வாக்கெடுப்பிலும் இறுதி வாக்கப்பெடுப்பிலும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் தலைவர் ரிஷாத் பதியூதீன், இஷ்ஹாக் றஹ்மான், அலி சப்றி றஹீம் மற்றும் முஷாரப் முதுநபீன் ஆகிய நால்வரும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என நேற்று முன்தினம்(21) நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அரசியல் அதிகார சபைக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கட்சியின் தலைவர் ரிஷாட் பதியூதீன் தவிர்ந்த ஏனைய மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக நேற்று(22) வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
இது தொடர்பில் நேற்றுமுன்தினம் ஒத்திவைக்கப்பட்ட கட்சியின் அரசியல் அதிகார சபைக் கூட்டம் நேற்று 22) இரவுஇடம்பெற்றது. இதன்போது கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்களான இஷ்ஹாக் றஹ்மான், அலி சப்ரி ரஹீம், முஷாரப் முதுநபீன் ஆகியோரை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்துவதெனவும், அவர்களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் எனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களான இஷ்ஹாக் றஹ்மான், அலி சப்ரி ரஹீம், முஷாரப் முதுநபீன் ஆகியோர் இன்றைய தினம் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவர்களுக்கெதிரான ஒழுக்காற்று நடவடிக்கை கட்சியினால் மேற்கொள்ளப்படும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் S.சுபைர்தீன் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





