சிறுவர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஆபாச வெளியீடுகளை தடுப்பதற்கு புதிய சட்ட மூலம் கொண்டுவரும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது நீதி அமைச்சர் அலி சப்ரி அமைச்சரவையில் முன்வைத்த தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சிறுவர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஆபாச வெளியீடுகளை தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிடும் செயற்பாடுகள் அண்மைக் காலத்தில் வேகமாக அதிகரித்துள்ளது
இவ்வாறான விடயங்கள் தொடர்பில் செயற்படுவதற்கு அமைவான ஒழுக்ட விதிகள், குற்றவியல் சட்டத்தில் மற்றும் ஆபாச வெளியீடு கட்டளைச் சட்டத்தில் உள்ளடங்குகின்ற போதிலும் தற்போதைய பாரதூரமான நிலைமைக்கு இதன் ஒழுங்கு விதிகள் பலமானதாக இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் முகவர் நிலையம் மற்றும் இலங்கை கணினி உடனடி பதில்கள் குழுவினால் சட்டமா அதிபரின் ஆலோசனையின் அடிப்படையில் புதிதாக ஒரு திருத்த சட்டமூலம் ஒன்றை தயாரிப்பதற்கு தேவையான தகவல்களை உள்ளடக்கிய ஆவணம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆவணத்தை அடிப்படையாக கொண்டு எதிர்வரும் காலங்களில் புதிய சட்டமூலம் ஒன்றை தயாரிப்பதற்காக சட்ட வரைபு பிரிவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.





