13ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்பட வேண்டுமென கோஷம் எழுந்துள்ள நிலையில் 13ஆவது திருத்தச் சட்டம் கட்டாயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என இந்தியப் பிரதமர் விடுத்துள்ள அறிவிப்பானது தமிழ் பேசும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்துள்ளது என தமிழ் முற்போக்குக் கூட்டணி அறிவித்துள்ளது.
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் காணொலி மூலம் நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் வே. ராதாகிருஷ்ணன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழுத்தம் தெரிவித்தமையை சிறுபான்மை கட்சி ஒன்றின் தலைவர் என்ற வகையில் வரவேற்கின்றேன்.
இந்தியாவின் இந்த நிலைப்பாடு இலங்கையில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு தமது உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கு உறுதுணையாக இருக்கும். மாகாண சபை முறைமைகள் மூலம் சிறப்பான சேவைகளை வழங்கமுடியும், என்றார்.





