யாழ்ப்பாணம் ஜே 65 , 67 கிராமசேவகர்கள் பிரிவுகளை உடன் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தினர் கொரோனா தடுப்பு செயலணியிடம் நேற்று இரவு கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்றுக்குள்ளான ஐவர் இனம்காணப்பட்டனர். அவ்வாறு இனம்காணப்பட்ட ஐவரில் மூவர் தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்தபோதும் இருவர் போலியகொட மீன் சந்தைக்குச் சென்று கடந்த வெள்ளிக்கிழமையே யாழ்ப்பாணம் திரும்பியிருந்தனர்.
அவ்வாறு வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் திரும்பிய நிலையில் அவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை இரவு தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டு சனிக்கிழமை மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட இருவரிற்கும் அன்றைய தினம் உறுதியான பெறுபேறு கிடைக்காது மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என சுகாதார பிரிவினரால் தெரிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் பிராந்திய பொது சுகாதார வைத்திய அதிகாரியினால் குறித்த இரு குருநகரைச் சேர்ந்தவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட சமயம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் அடிப்படையிலேயே குருநகரின் இரு கிராம சேவகர் பிரிவுகளையும் உடன் தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





