இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசத்தை ஊடறுத்துச் சென்ற புரவி சூறாவளியானது கடந்த வாரம் நடைபெற்ற மாவீரர் தினத்தின்போது வந்திருந்தால் சந்தோசமடைந்திருக்கலாம் என ஐக்கிய மக்கள் சக்த்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
பொதுமக்கள் யாரும் இறுதிப்போரில் கொலை செய்யப்படவில்லை. மாறாக விடுதலைப் புலிகள் இயக்கமே கட்டாயப்படுத்தி பொதுமக்களை முன்னணியில் நிறுத்தி போராடினார்கள். அப்படியான கட்டத்தில் கூட நாங்கள் பலரையும் மீட்டோம். புனர்வாழ்வுக்கும் அனுப்பினோம்.
இதேவேளை மாவீரர் தினத்தை கொண்டாட ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசத்தை ஊடறுத்துச் சென்ற புரவி சூறாவளியானது கடந்த வாரம் நடைபெற்ற மாவீரர் தினத்தின்போது வந்திருந்தால் சந்தோசமடைந்திருக்கலாம். மக்களுக்கு சேதம் ஏற்பட வேண்டும் என நான் கூறவில்லை. ஆயினும் மாவீரர்கள் நினைவேந்தலை நடத்த அனுமதிக்க முடியாது.
இலங்கை உட்பட உலகின் பல நாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கூட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பதாதையொன்று காட்சிக்கு வைக்கப்பட்டபோது பொலிஸாரினால் அகற்றப்பட்டது. எமது நாட்டில் அது செய்திருந்தால் நாடாளுமன்றத்திலும் எதிர்ப்பு வெளியிட்டிருப்பார்கள்.
எமது தரப்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூட மாவீரர்நாள் குறித்து நியாயப்படுத்தி கருத்து வெளியிட்டிருந்த போதிலும் அது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும். சிலர் ஜே.வி.பியுடன் மாவீரர்களை ஒப்பீடு செய்கிறார்கள். ஆனால் ஜே.வி.பியினர் மிகவும் சிறிதளவான போராட்டத்தை நடத்திய போதிலும் நாட்டைப் பிரிக்கும் வகையில் செயற்படவில்லை. மீண்டும் இந்த நாட்டில் பிரிவினைவாதத்தை தலைதூக்க இடமளிக்கமாட்டோம் என கூறியுள்ளதா தமிழ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.





