ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு கோரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உங்களுக்கு நீங்களே செருப்பால் அடித்துக்கொள்ளுங்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
பருத்தித்துறையில் இன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்:
புரவிப் புயல் மாவீரர் நாள் காலப் பகுதியில் வடக்கு- கிழக்கில் தாக்கியிருந்தால் தான் மகிழ்ந்திருப்பேன் என சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார். அதேபோன்று ஆறாயிரம் பேர் மாத்திரமே இறுதிப் போரில் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்த்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை இரண்டு கட்டங்களாக வெளியிட்டிருந்த அறிக்கையில் இறுதிப்போரில் 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாகவும் பின் 80 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது.
சரத் பொன்சேகா தற்போது சொல்லியிருக்கின்ற கருத்தின் மூலம் அவர்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான எண்ணம் கொண்டவர் விடுதலைப்புலிகள் அன்று நடத்திய கரும்புலித் தாக்குதலில் உயிரிழந்திருக்கலாம் என தமிழ் மக்கள் எண்ணுகின்றார்கள்.
சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என தமிழ் மக்களிடம் ஜனாதிபதித் தேர்தலின் போது கோரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், உங்களுக்கு நீங்களே செருப்பால் அடித்துக்கொள்ளுங்கள். இதேவேளை சஜித் பிரேமதாஸவும் இதே நிலைப்பாட்டில் உள்ளார். அவருக்கும் கூட்டமைப்பினர் ஆதரவு கோரியிருந்ததையும் சிவாஜிலிங்கம் நினைவுபடுத்தினார்.





