நாம் வெல்வோம் என்பதால் இடைஞ்சல்; பட்ஜட் கலவரம் தொடர்பில் தவிசாளர் விளக்கம்

வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்டம் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது என பிரதேச சபையின் தவிசாளர் திருமதி ஸோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 8ம் திகதி வரவு செலவு கூட்டம் நடைபெறுவதற்கு முதலே என்னை தாக்கி கூட்டத்தினை நடத்தவிடாது வெளிநடப்பு செய்யப்பட்டது. பிரதி தவிசாளர் பொலிஸாரை கண்டு ஓடி, பின் பக்கமாக வந்து என்னை தாக்கிய சம்பவம் இடம்பெற்றது.

உண்மையாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி பின் பக்கத்தால் களவாக வருவதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது. இவர்கள் கூச்சல் இட்டு என்னை தாக்கினர். அவ்விடத்தில் எமது கட்சி தலைவரின் சகோதரர் இருந்தமையால் அவர் என்னை அழைத்து மருத்துவமனையில் அனுமதித்தார்.

நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற அச்சம் எதிர் தரப்பினருக்கு இருந்தது. அதனால் பல குழப்பங்களை வெளியில் ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். நான் ஆசிரியராக இருந்து மக்களுக்கு ஜனநாயக ரீதியில் சேவையாற்றி வருகின்றேன். இதேவேளை எமது கட்சி தலைவர் பிள்ளையான் எம்பி இன்று சபைக்கு வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்ட போதும் அவர்கள் கூட்டத்தினை குழப்பும் விதமாகவே செயற்பட்டனர், என்றார்.