மருதனார்மடம் சந்தையில் சுகாதார நடைமுறைகள் இறுக்கம்! 394 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை

மருதனார்மடம் சந்தை வியாபாரி ஒருவர் தொற்றாளராக அடையாளங் காணப்பட்டதையடுத்து சந்தையின் சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக்கப்பட்டுள்ளன. மேலும் இன்று(12) மிக குறைந்தளவிலான மக்களே சந்தைக்கு வருகைதந்திருந்தனர்.

எழுமாற்றான பி.சி.ஆர் பரிசோதனையில் மருதனார்மடம் சந்தை வியாபாரி மற்றும் முச்சக்கர வண்டி சாரதி என இருவேறு தொழில்களில் ஈடுபடும் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று(11) கண்டறியப்பட்டது.

இந் நிலையில் மருதனார்மடம் சந்தை மற்றும் அதனைச் சூழவுள்ள வியாபார நிலையங்களைச் சேர்ந்த 394 பேரிடம் இன்று காலை பி.சி.ஆர் பரிசோதனைக்காக மாதிரிகள்பெறப்பட்டுள்ளன. இவ் பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்னரே சமூகத் தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதனை அறியமுடியும்.

மேலும் இன்று(12) மிக குறைந்தளவிலான மக்களே சந்தைக்கு வருகைதந்திருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. அத்துடன், முச்சக்கர வண்டிச் சாரதிக்கு எவ்வாறு கோரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பில் சுகாதாரத் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். அவரோடு தொடர்புடைய நபர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.