கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவிற்கு தெரிவிக்காமல் காணிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று(17) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பூநகரி பகுதியில் உள்ள எல்.ஆர்.சி காணிகளை அரசாங்க அதிகாரிகள் பணம் பெற்று வழங்கியதாக அமைச்சருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே குறித்த உத்தரவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட விவசாயத்தை நம்பி வாழும் குடும்பங்களுக்கு விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு காணிகள் வெகுவிரைவில் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.





