யாழ் மாநகர சபை பட்ஜெட்டை ஆதரிக்குமாறு ஆனோல்ட் குறுஞ்செய்தி அனுப்பினார் – டக்ளஸ்

யாழ் மாநகர சபை பட்ஜெட்டை ஆதரிக்குமாறு முதல்வர் ஆனோல்ட் குறுஞ்செய்தி அனுப்பியதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று(18) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார். இவ் ஊடக சந்திப்பில் யாழ். மாநகர சபையின் வரவு – செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் யாழ். மாநகர சபை வரவு-செலவுத் திட்டத்தை ஆதரிக்குமாறு கோரி குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார்கள் . எனினும் அவர்கள் நேரடியாக சந்திக்க விரும்பவில்லை. எனினும் வரவு செலவுத் திட்டத்தை ஆதரிப்பது தொடர்பில் எழுத்து மூலம் குறித்த விடயத்தினை தெரியப்படுத்தினால் அதனை பரிசீலிக்க முடியும் என தெரிவித்திருந்தேன்.

ஏனெனில் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவின் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் போன்றோர் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கைகளை வைத்திருந்தார்கள்.

எனினும் ஊடகங்கள் வாயிலாக அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி கருத்துக்களை முன் வைத்திருந்தார்கள். அதன் காரணமாகவே நான் எந்த விடயம் என்றாலும் எழுத்து மூலமாக கோரிக்கை விடுமாறு கோரியிருந்தேன். எனினும் அவர்கள் அதனை செய்ய முன்வரவில்லை.

எனினும் வரவு – செலவுத்திட்டம் தினத்தன்று காலையில் மாநகர முதல்வர் ஆனோல்ட் குறுஞ்செய்தியை அனுப்பி இருந்தார். அதில் தமக்கு ஆதரவு வழங்குமாறு அனுப்பியிருந்தார். எனினும் அது தொடர்பில் நான் கால தாமதமாகி விட்டது எனவும் பதில் தெரிவித்திருந்தேன் என்றார்.