நினைவேந்தல் தடைக்கு எதிராக மேன்முறையீடு – மணிவண்ணன்

நாளைய தினம்(15) நடைபெறவிருந்த தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு யாழ் நீதவான் நீதிமன்று தடை வித்துள்ளது. இது தொடர்பாக மேன்முறையீடு செய்வதற்கான நடவடிக்களை மேற்கொள்ளவுள்ளதாக சட்டத்தரனி மணிவண்ணன் தெரிவித்தார்.

தியாகி திலீபனின் நினைவேந்தல்களுக்கு யாழ் நீதவான் நீதிமன்றமும் தடைவிதித்தது. இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நாளைய தினம் யாழில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தியாகி திலீபனின் நினைவேந்தல்களை தடைசெய்யக்கோரி யாழ்ப்பாணப் பொலிஸாரால் யாழ் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

இவ் வழக்கில் நானும் சட்டத்தரனி சுகாஷ் கனகரட்ணமும் ஆஜராகினோம். பொலிஸாரின் விண்ணப்பத்தை நிராகரித்து நாளை நினைவேந்தல்களை நடாத்த அனுமதி தருமாறு நாங்கள் விண்ணப்பித்திருந்தோம்.

தியாகி திலீபன் அகிம்சை வழியில் உண்ணாவிரமிருந்து உயிர்நீர்த்தவர். இறந்த ஒருவரை நினைவுகூறுவது பயங்கரவாத மீளூருவாக்கம் அல்ல என்பதனையும், இவ் நினைவேந்தல் சுகாதார விதிமுறைகளை பின்பற்றியே இடம்பெறும் என்ற உத்தரவாதத்தையும் நீதிமன்றிற்கு வழங்கியிருந்தோம்.

எனினும் துரதிஷ்டவசமாக எங்களுடைய விவாதங்கள் நிராகரிக்கப்பட்டு பொலிஸாரால் கோரப்பட்ட தடை விதிக்கப்பட்டது.

இத் தடைக்கு எதிராக மேன்முறையீடு செய்வதென தனிப்பட்ட ரீதியில் தீர்மானித்திருக்கிறேன். தடைக்கு எதிராக விரைவாக மேன்முறையீடு செய்யவுள்ளேன், என்றார்.