யாழில் உள்ள நான்கு கொரோனா தொற்றாளர்களுக்கு அடுத்தடுத்து வைத்தியசாலைகள் ஏன்? – சுரேஷ்

யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த நால்வர் மாத்திரமே தற்போது வரை கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ள நிலையில் யாழில் ஒன்றுக்கு மேற்பட்ட கொரோனா வைத்தியசாலைகள் தேவைதானா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
காலைக்கதிர் பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கோப்பாய் கல்வியற் கல்லூரி தற்போது கொரோனா வைத்தியசாலையாக மாற்றப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்தால் இங்கு ஒன்றுக்கு மேற்பட்ட வைத்தியசாலைகள் தேவைப்படும். ஆனால் இங்கு நான்கு தொற்றாளர்கள் மாத்திரமே இனம்காணப்பட்டுள்ளனர்.
 தென்பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றாளர்களையே எமது பிரதேசங்களில் தனிமைப்படுத்துகின்றனர். தனிமைப்படுத்தல் நிலையமாக இருந்த கோப்பாய் கல்வியற் கல்லூரியை தற்போது கொரோனா வைத்தியசாலையாக மாற்றவுள்ளனர். அதனைச் சூழவுள்ள மக்கள் இது தொடர்பில் அச்சத்தில் உள்ளனர். இவ் விடயத்தில் எமது மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் ஆகியோர் கண்டுகொள்ளாது உள்ளனர்.
தென்னிலங்கையில் இருந்து கொரோனா தொற்றாளர்களை இங்கு அழைத்து வந்து சிகிச்சை மேற்கொள்ளும் போது கொரோனா தொற்று இல்லாத எமது பிரதேசங்களிலும் கொரோனா பரவிவிடுமோ என்ற அச்சம் தோன்றுகின்றது.
ஒரு மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களை இன்னோர் மாவட்டங்களுக்கு கொண்டுசென்று சிகிச்சையளிக்காது அந்தந்த மாவட்டங்களிலேயே சிகிச்சை நிலையங்களை அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும், என்றார்.