கோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்தில் மதுபோதையில் பொலிஸார், சேவையிலிருந்து இடைநீக்கம்

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் பாதுகாப்புக் கடமைக்கு அனுப்பப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர், மதுபோதையில் இருந்தமை மற்றும் கடமையைச் செய்யத் தவறிய குற்றச்சாட்டில் பொலிஸ் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி வளாகத்தில் தனிமைப்படுத்தல் மற்றும் கொரோனா சிகிச்சை நிலையங்கள் தனித்தனியே இயங்கி வருகின்றன. தனிமைப்படுத்தல் நிலையம் இராணுவத்தினரின் நிர்வாகத்தின் கீழும் கொரோனா சிகிச்சை நிலையம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நிர்வாகத்தின் கீழும் இயங்குகின்றன.

வளாகத்தில் நேற்று வியாழக்கிழமை இரவுக் கடமைக்கு என கோப்பாய் பொலிஸ் நிலையத்திலிருந்து இரு பொலிஸார் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் மதுபோதையில் நள்ளிரவு 12 மணியளவில் அங்கு கடமையில் இருந்த இராணுவத்தினருடன் முரண்பட்டுள்ளனர். அதனால் இராணுவச் சிப்பாய்கள் பொலிஸாரைத் தாக்கியதால் இரு தரப்புக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தையடுத்து மதுபோதையில் இருந்தமை மற்றும் கடமையைச் செய்யத் தவறிய குற்றச்சாட்டில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கான பணிப்புரையை யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வழங்கியுள்ளார்.