
கிளிநொச்சி பொதுச்சந்தை பூட்டுவது தொடர்பாக இன்று (18) மாறி மாறி கிடைத்த அறிவிப்புக்களால் சந்தை வர்த்தகர்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
வட மாகாணத்திலுள்ள அனைத்து பொது சந்தைகளும் பூட்டப்படும் எனும் அறிவித்தல் வெளியான நிலையில் இன்று காலை மரக்கறி மற்றும் மீன் சந்தைகளை பூட்டுமாறும், ஏனைய வர்த்தக நிலையங்கலாய் வழமைபோன்று இயங்கும் எனவும் அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து ஏனைய வர்த்தகர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். சில மணிநேரங்களின் பின்னர் அனைத்து வர்த்தக நிலையங்களையும் பூட்டுமாறும் கரைச்சி பிரதேச சபையினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மாறி மாறி கிடைத்த அறிவித்தல்களால், பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்ட சந்தை வர்த்தகர்கள் முழுமையாக தமது வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபடாது வெளியேறினர். சந்தையின் உட்பகுதியில் உள்ள பல்பொருள் வாணிபம், ஆடை விற்பனை நிலையம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வர்த்தகர்கள் தமது வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.





