13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான ஜனாதிபதியின் செயற்பாடுகள் மீண்டும் நாட்டில் இனவாத மோதல்களுக்கே கொண்டு செல்லும் என எதிர்க்கட்சியின் சுயாதீன அணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது ரணில் விக்ரமசிங்க முன்வைக்கும் விடயங்களின் பாரதூர நிலைமையை சபையில் உள்ளவர்கள் புரிந்துகொண்டுள்ளார்களா என்று தெரியவில்லை. நாட்டில் பொதுப் பிரச்சினைகள் உள்ளன. நிதி, கலாசார பிரச்சினைகள் உள்ளன. இவற்றை தீர்ப்பதற்காக இன விவகாரத்தை எடுக்க வேண்டாம்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய சூழ்நிலை 50 வீதம் உள்ளது. மிகுதி 50 வீதத்தை நாடு முழுவதும் நிலவும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு கண்டாலே தீர்க்க முடியும்.
இதனால் இந்த பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காண வேண்டும். அனைத்து இனத்தவர்களும் இணைந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம். வடக்கிற்கு அதிகாரங்களை வழங்குவதன் மூலம் பிரச்சினைகள் தீர்ந்துவிட போகின்றதா? 13 ஆவது திருத்தத்தை வழங்கியதும் யுத்தம் முடிந்துவிடும் என்று நினைத்தனர். ஆனால் யுத்தம் நடைபெற்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.





