நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்திற்கு நல்லாட்சி அரசின் காலத்தில் அரசாங்க நிதி ஒதுக்கீட்டில் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டமை தொடர்பில் கடந்த ஆண்டு விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
தியாகதீபம் திலீபனின் இறுதி நாள் நினைவேந்தலுக்கு முன்னதாக இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டனர்.
நல்லாட்சி அரசின் காலத்தில் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சுக்கு ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட ஒக்கீட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் நிதியில்(NewsCut.lk) பாதுகாப்பு வேலிக்கான நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கு அமைவாக அது நிர்மாணிக்கப்பட்டது
பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு நான்கு ஆண்டுகளின் பின்னர் விசாரணைகள் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.
இந்த நிலையில் இந்த ஆண்டு தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஆரம்பமாகியுள்ள நிலையில் பொலிஸ் திணைக்களம் கடந்த ஆண்டு இடம்பெற்ற விசாரணையின் முன்னேற்றம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கோரியுள்ளது. இதற்கு அமைவாக சட்டமா அதிபர் திணைக்களம்(NewsCut.lk) உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிடம் விளக்கம் கேட்டுள்ளது.
இதனையடுத்து உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் புலன் விசாரணைப் பிரிவு யாழ்ப்பாணத்திற்கு இந்த வாரம் வருகை தந்து அப்போதைய மாநகர சபையின் ஆணையாளராக இருந்த வாகீசனிடம் வாக்குமூலம் பெற்றுள்ளது. நல்லூர் பிரதேச செயலகம் ஊடாக கிடைத்த நிதியில் பணிகளை மாநகரசபையே முன்னெடுத்து அமையால் அதன் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கு அமைவாக தியாகதீபம் திலீபனின் இறுதி நாள் நினைவேந்தலுக்கு முன்னதாக அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு உள்நாட்டு அலுவலர்கள் அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது





