முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பான கடிதம் தமக்கு இதுவரையும் கிடைக்கவில்லை என நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு நீதவான் பதவி விலகல் தொடர்பில் சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய தகவலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து உயிர் அச்சுறுத்தல் மற்றும் அரசியல் அழுத்தங்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா நேற்றைய தினம் தமது பதவியிலிருந்து விலகி இலங்கையை விட்டு வெளியேறியிருந்தார்.
விஜேயதாச ராஜபக்ச மேலும் தெரிவிக்கையில் , முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி கடந்த வாரம் கொழும்புக்கு பயணம் செய்திருந்ததாகவும் அவரது வாகனத்தை விற்பனை செய்துள்ளதாகவும் விஜேயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
சரவணராஜாவின் கொழும்புக்கான பயணத்தின் போது அவர் மேற்குலக நாடுகளின் தூதுவர்களையும் சந்தித்துள்ளதாக நீதி அமைச்சர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் தாம் தனிப்பட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், அனைத்து நீதிபதிகளுக்கும் வழங்கப்பட்ட அதே பாதுகாப்பு அவருக்கும் வழங்கப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.





