கட்சிகளை நல்வழிப்படுத்த புத்திஜீவிகளை கொண்ட மூதவை வேண்டும் – சிறிநேசன்

சுயநலவாதிகள் தவிர்ந்த புத்திகள், ஆன்மீகத் தலைவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மூத்த பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு மூதவை எங்களுக்கு இருக்க வேண்டும். அந்த மூதவை தமிழ் கட்சிகளின் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

“தடைகளை வெல்லும் தமிழ்த் தேசியம்” எனும் தொனிப் பொருளில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

எங்களுடைய தமிழ்த் தேசிய பயணத்தில் பல்வேறுவிதமான தடைகள் உள்ளன. அத் தடைகளை அகத்தடை, புறத்தடை என பிரித்துநோக்கலாம். அந்த தடைகளை நாங்கள் முழுமையாக இனம்காணவேண்டும்.

எங்களுக்கு சமூக, பொருளாத, அரசியல், பண்பாடு ரீதியாக பல தடைகள் சவால்கள் இருக்கின்றன. புறத்தடைகள் எனும்போது தமிழினத்தை சிதைக்க வேண்டும், அவர்களின் ஒற்றுமையை சிதைக்க வேண்டும் என்ற அடிப்படையில் பேரிணவாதம் பிரித்தாளும் தந்திரத்தை பயண்படுத்திக்கொண்டிருக்கின்றது.

பேரிணவாதம் எமது ஒற்றுமையை சிதைப்பதற்காக பல வழிகளை கையாள்கிறது. இவை எல்லாவற்றையும் கடப்பதற்கு எமக்கு பலமான தமிழ்த்தேசிய பற்றுதி இருக்க வேண்டும். சிலரைப் பார்த்தால் தமிழ் தேசிய அரசியலோடு பயணிப்பதாக காட்டிக் கொள்வார்கள். ஆனால் அவர்களை ஆராய்ந்து பார்த்தால்  அவர்களிடம் தமிழ் தேசியம் இருப்பதில்லை.  இப்படியானவர்களோடுகூட பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளோம்.

சமூக ரீதியாக எங்களுக்கு இடையில் பல்வேறுபட்ட சாதிய முரண்பாடுகள் காணப்படுகின்றன. இந்த முரண்பாடுகளை வைத்துக் கொண்டும் எங்களைப் பிரித்தாள நினைக்கிறார்கள். மதங்களை வைத்துக்கொண்டு பிரித்தாள நினைக்கிறார்கள். எனவே நாம் தமிழ்த்தேசியம் தோடு ஒன்றினைந்து பயணிக்க வேண்டும்.

தமிழ் தேசியத்துக்கு எதிராக வரும் தடைகளை தாண்டுவதற்கு புத்திஜீவிகளைக் கொண்ட ஒரு மூதவை இருக்க வேண்டும். அதாவது சுயநலவாதிகள் தவிர்ந்த புத்திகள், ஆன்மீக தலைவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மூத்த பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு மூதவை எங்களுக்கு இருக்க வேண்டும். அந்த மூதவை தமிழ் கட்சிகளை வழிகாட்டியாக இருக்க வேண்டும், என்றார்.