புதிய அரசாங்கமும் தமிழ் மக்களை இரண்டாம் தர பிரஜையாகவே பார்க்கின்றது – சந்திரஹாசன் இளங்கோவன்

தேசிய மக்கள் சக்தியானது சமத்துவமான ஒரு அரசியலை பேசுகின்றது புதிய ஒரு அரசியல் கலாச்சாரத்தை முன்னெடுக்கின்றது என்று. ஆனால் இடதுசாரி கட்சிகள் சமத்துவம் பேசுவது என்பது புதியதல்ல, ஆனால் அந்த சமத்துவ அரசியலிலும் கவலையான விடயம் தமிழ் மக்களை இரண்டாம் தரப்பாக பார்க்கின்ற விடயம் காணப்படுகிறது.

இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர் சந்திரஹாசன் இளங்கோவன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக விழா நேற்றுயாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

தென்பகுதியில் ஒரு மாற்றம் இடம்பெற்றிருக்கிறது. ஊழலுக்கு எதிரான அரசு வேண்டும், எல்லோரும் சமமானவர்கள், எல்லோரும் இலங்கை மக்கள் என்று ஒரு மாற்றத்திற்கான அலை காணப்படுகிற அதே நேரம் தமிழர்கள் மத்தியில் பல குழப்பங்கள் காணப்படுகின்றன. கூட்டமைப்புக்குள் குழப்பம் கட்சிக்குள் குழப்பம் என நாம் பிரிந்து நிற்கின்றோம்.

இந்த குழப்பங்களுக்கு மத்தியில் இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. இளைஞர்கள் தற்போது கூறுகிறார்கள் தேசிய மக்கள் சக்தியானது சமத்துவமான ஒரு அரசியலை பேசுகின்றது புதிய ஒரு அரசியல் கலாச்சாரத்தை முன்னெடுக்கின்றது என்று. ஆனால் இடதுசாரி கட்சிகள் சமத்துவம் பேசுவது என்பது புதியதல்ல, ஆனால் அந்த சமத்துவ அரசியலிலும் கவலையான விடயம் தமிழ் மக்களை இரண்டாம் தரப்பாக பார்க்கின்ற விடயம் காணப்படுகிறது.

அதிலிருந்து அவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. அவர்கள் தமிழருடைய தீர்வு தொடர்பான தெளிவான விடயத்தினை இதுவரையிலும் முன் வைக்கவில்லை. அவர்கள் அதை வெளிப்படையாக கூறுவதற்கு பயப்படுகிறார்கள். மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும், எனத் தெரிவித்தார்.