தமிழ் தேசியத்தை கொச்சைப்படுத்தும் கருத்துக்களை தமிழரசுக் கட்சி ஒரு போதும் அனுமதிக்காதது, விரும்பினால் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தனியாக ஐ.நாவிற்கு கடிதத்தை அனுப்பலாம் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கடுமையாக தெரிவித்துள்ளார்.
இன்று இணையவழி ஊடாக இடம் பெற்ற அரசியற் குழு கூட்டத்தில் கலந்து கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்றைய இணைய வழியாக இடம்பெற்ற இந்த கூட்டத்தில் தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், பொ.செல்வராசா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், த.கலையரசன், கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இலங்கை இராணுவமும், விடுதலைப் புலிகளும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டார்கள் என குறிப்பிடும் ஆவணத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்புவதற்கு இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழுவில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் அதிகளவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட மாட்டார்கள் என்பது உறுதியானதையடுத்து, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கையொப்பத்துடன் கடிதத்தை வேண்டுமானால் அனுப்பலாம் என மாவை திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





