யாழ்ப்பாணத்தில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயார் கொரோனாத் தொற்றால் பரிதாபமாக உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த அஜந்தன் இனியா (வயது-25) என்ற பெண்ணே இவ்வாறு யாழ் போதனா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். எனினும் குழந்தைகள் இருவரும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.
கடந்த 4ஆம் திகதி குறித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் அன்றைய தினம் தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அன்றைய தினமே அவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை (8) ஆண் குழந்தை ஒன்றும் பெண் குழந்தை ஒன்றுமாக இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.
சிகிச்சைகள் தொடர்ந்த நிலையில் நேற்று(09) சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





