சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று தமிழ் அரசியல் கைதிகளை வரவழைத்து, அவர்களில் இருவரை மண்டியிடச் செய்து, துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியுள்ளார் என நாடாளுன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
செப்டம்பர் 12 ஆம் திகதி மாலை அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர், தமிழ் அரசியல் கைதிகளை வரவழைத்து, அவர்களில் இருவரை அவருக்கு முன்னால் மண்டியிட வைத்தார் என்பதை உறுதிப்படுத்த முடியும்.
இராஜாங்க அமைச்சர் அவர்களை நோக்கி தனது தனிப்பட்ட துப்பாக்கியைக் காட்டி அவர்களை அந்த இடத்திலேயே கொன்றுவிடுவதாக மிரட்டினார்.
இராஜாங்க அமைச்சரின் இந்த மோசமான நடத்தையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி மிகக் கடுமையான முறையில் கண்டிக்கிறது.
தமிழ் அரசியல் கைதிகள் ஏற்கனவே மிகக் கடுமையான சட்டங்களில் ஒன்றான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்தனர்.
அரசியல் கைதிகளின் விவகாரங்களைக் கவனிக்க வேண்டிய இராஜாங்க அமைச்சர் அவர்களைக் கொல்வதாக அச்சுறுத்துவதை ஏற்கமுடியாதெனவும்,அமைச்சரை உடனடியாக பதவி விலகச் செய்ய வேண்டும் மற்றும் அவரிடமிருந்து அனைத்து பதவிகளையும் பறிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்துகிறது, என டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





