கொழும்பு நாராஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் திருகோணமலையைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைக்குண்டு மீட்கப்பட்ட கொழும்பு நாராஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ள நீர்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஸ, விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரணவும் சிகிச்சை பெற்று வருவதாக அறிய முடிகின்றது.
இந்த நிலையில், இவர்களில் எவரையாவது இலக்கு வைத்து குறித்த கைக்குண்டு கொண்டுவரப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணைகள் நடத்தப்படுவருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ள CCTV கமரா காணொளியின் ஊடாக நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் கைக்குண்டை கொண்டு வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை – உப்புவெளி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் இளைஞன், வைத்தியசாலைக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்படும் கட்டட நிர்மாணப் பணிகளில் கடமையாற்றி வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
குறித்த இளைஞன் மேலதிக விசாரணைகளுக்காக குற்றத் தடுப்பு பிரிவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைக்குண்டின் பாதுகாப்பு ஆணியை கழற்றி, நுளம்பு சுருளொன்றை இணைத்து, வெடிக்கும் வகையில் இந்த கைக்குண்டு தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)
இது தொடர்பான மேலதிக செய்திகள்





