ரத்வத்தவிற்கு எதிராக உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்க சரத் வீரசேகர உத்தரவு!

அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதியொருவரை, துப்பாக்கி முனையில் முழந்தாளிடச் செய்து அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற ரியல் அட்மிரல் சரத் வீரசேகர, பொலிஸ் மாஅதிபர் சந்தன விக்ரமரத்னவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் மீது சிறை கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு, குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் நேற்று(16) முறைபாடொன்றை பதிவு செய்திருந்தது.

சந்தேகநபரான இராஜாங்க அமைச்சரை, கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு முறைபாட்டாளர் தரப்பு கோரியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் முறைபாடுகள் கிடைக்கப் பெற்றால், விசாரணைகளை முன்னெடுப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நேற்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், கிடைக்கப்பெற்ற முறைபாடு குறித்து உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)