பிழையான நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களை தொடர் போராட்டத்திற்கு அரசாங்கம் தள்ளுகின்றது. நினைவேந்தல் தடைகளை விலக்குமாறு எமதுகோரிக்கைகள் அடங்கிய கடிதத்தினை நாளை ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ளோம் என சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
நல்லூர், இளங்கலைஞர் மண்டபத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன் பின்னர் அனைத்துக் கட்சிகளின் சார்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தியாகி திலீபனின் நினைவேந்தல் தொடர்பாக வடக்கு கிழக்கில் பல்வேறு தடைகளை நீதிமன்றம் ஊடக அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் மக்களினுடைய விடுதலைப் போராட்டத்தில் போராளிகள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு அஞ்சலி செழுத்துவதும், நினைவுக் கூட்டங்களை நடாத்துவதும் ஒவ்வொரு தமிழ் மக்களின் உரிமையும் கடமையுமாகும்.
இலங்கை அரசாங்கம் உடனடியாக இந்த தடையுத்தரவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவுள்ளோம். இதற்கு இரு நாட்களுக்குள் அரசு முடிவினை அறிவிக்க வேண்டும்.
அவ்வாறு முடிவுகளை அறிவிக்காத பட்சத்தில் அனைத்துக் கட்சிகளும் ஜனநாயக ரீதியாக பாரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம். இவ் நடவடிக்கைகள் இலங்கை அரசை கண்டிப்பதாக அமையும்.
இலங்கை அரசாங்கம் பிழையான நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களை தொடர் போராட்டத்திற்கு தள்ளுகின்றனர், என்றார்.





