தமிழ் இளைஞர்களுக்கு புலனாய்வுத் துறையினரின் அச்சுறுத்தல் – சிறிதரன் எம்.பி

தமிழ் இளைஞர்கள் புலனாய்வுத் துறையினரின் அச்சுறுத்தலால் நாட்டைவிட்டு வெளியேற எத்தனிக்கின்றார்களென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இலங்கைக்கான கனேடிய தூதுவரிடம் தெரிவித்தார்.

இலங்கைக்கான கனடிய தூதுவர் டேவிட் மக்கினன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று அவரது கிளிநொச்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.

கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது சிறிதரன் எம்.பி மேற்கொண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கனேடிய தூதுவருடனான இந்த கலந்துரையாடல் ஆரோக்கியமாக இருந்தது. இதன்போது தற்போது இருக்கும் அரசாங்கம் தமிழர்களை அரச இயந்திரத்தால் நசுக்கப்படுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

தமிழர்கள் தமது உணர்வுபூர்வமான நினைவுகளை மேற்கொள்வதற்கு இப்போது இருக்கும் அரசாங்கம் கொரோனாவை சாட்டு வைத்து தடைகள் விதிக்கின்றது. அதனை மீறி நினைவேந்தல்கள் இடம்பெற்றால், அதில் கலந்து கொண்டவர்களை புலனாய்வாளர்கள் மூலமாக அச்சுறுத்துவது தொடர்பாகவும் எடுத்துரைத்தேன்.

அத்துடன் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலாலும் தமிழ் இளைஞர்களிற்கு வேலைவாய்ப்பு கொடுப்பதில் உள்ள பின்னடைவாலும் இலங்கையில் வட பகுதியில் உள்ள தமிழ் இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதையும் சுட்டிக்காட்டினேன்.

கனேடிய தேசிய விழாவில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதற்கும் ஜெனிவா தீர்மானங்களில் கனடிய அரசாங்கம் மேற்கொண்டுவரும் ஒத்துழைப்புகளுக்கும் கனேடிய அரசிற்கும் நன்றி தெரிவித்துடன்

கனடிய அரசாங்கம் மனிதாபிமானத்துடனும் பக்கச்சார்பு இன்றியும் தொடர்ந்தும் ஜெனிவா தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு தருவோம் எனவும் கனடிய தூதுவர் டேவிட் மக்கினனின் உறுதிமொழியோடு கலந்துரையாடல் முடிந்தது எனக் குறிப்பிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)