தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் ஒக்டோபர் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படும் என அறவிக்கப்பட்டுள்ளது.
இன்று (29) காலை கொரோனா ஒழிப்புச் செயலணியுடன் காணொளி தொழில்நுட்பம் ஊடான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இதனைக் குறிப்பிட்டார்.
புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக, பாடசாலை மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் அதிபர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி பாடசாலைகளை ஆரம்பிக்கும் செயற்பாடுகளை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பல்கலைக்கழகங்களின் முதலாம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை துரிதமாக ஆரம்பிக்குமாறு சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
பொது இடங்கள், கடைகள், உணவகங்கள் மற்றும் பிற பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை உடனடியாக ஆராய்வதெனவும் முடிவு செய்யப்பட்டது.
தடுப்பூசி பெறாதவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் விதிகள் உள்ளதை சுட்டிக்காட்டி, சட்ட மா அதிபரின் ஆலோசனையை நாடியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
தடுப்பூசி தொடர்பில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக ஊடகங்கள் உள்பட பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களை உடனடியாக அவதானிக்குமாறு ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நிலமையை கட்டுப்படுத்தி நாட்டை வழமைக்கு கொண்டு வருவதற்கு மாகாண மற்றும் மாவட்ட சுகாதார பணிப்பாளர்கள் அதிக பொறுப்புடன் செயற்பட வேண்டும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சகல துறைகளுடனும் ஒருங்கிணைந்து கொரோனா ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு வலியுறுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





