தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளை அழைத்து வரும் நடவடிக்கை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிக்கின்றார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று(31) இடம்பெற்றது. இதன்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். மேலும்,
தமிழகத்திலுள்ள அகதிகள் குறித்து, அமைச்சரவையில் எதுவிதமான கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை. அகதிகளை அழைத்து வரும் நடவடிக்கைகள் சில காலங்களுக்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும் அந்த நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
எனினும், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளை மீள நாட்டிற்கு அழைக்கும் விதத்தில் கடந்த 28ம் திகதி டுவிட்டர் பதிவொன்றை பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





