தேர்தலில் தனித்துப்போட்டியிட்டால் பரவாயில்லை, உரிமைகளுக்காக ஒன்றுபட்டுப் போராடுங்கள் என ஐக்கிய சோஷலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்
தியாகி திலீபன் உட்பட விடுதலைப் போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களுக்காக நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்
தமக்காக அறவழியில் போராடி உயர்நீத்தவரை தேசிய வீரராகவே தமிழ் மக்கள் கருதுகின்றனர். அதற்கான உரிமையும் அவர்களுக்கு இருக்கின்றது.
நினைவேந்தல்களுக்கு எதிர்ப்பை வெளியிடுவதற்கும், தடைவிதிப்பதற்கும் அரசுக்கு எதுவிதமான அதிகாரமும் கிடையாது.
தமிழ் மக்களுக்கான உரிமைகளை இந்த அரசாங்கம் மிகசும் சூட்சுமமான முறையில் பறித்துவருகின்றது. இது ஆரம்பம்தான்,
இதன் இறுதிக் கட்டம் கழுத்துக்கே கைகள் வரும்.
அடக்குமுறைகளை தமிழர்கள் ஆரம்பத்திலேயே உடைத்தெறிய வேண்டும். தேர்தலில் தனித்துப்போட்டியிட்டால் பரவாயில்லை, உரிமைகளுக்காக ஒன்றுபட்டுப் போராடுங்கள் என தேர்தலுக்கு முன்னரே தமிழ்க் கட்சிகளுக்கு நான் அழைப்பு விடுத்திருந்தேன்.
எனவே, வடக்கு, கிழக்கில் தமிழ் கட்சிகளால் ஒன்றினைந்த முறையில் முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு எங்கள் தரப்பிலும் முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும்.
எமக்கு சார்பான அமைப்புகள், தொழிற்சங்கங்கள், ஆதரவாளர்கள் என அத்தனை பேரினதும் ஆதரவு உள்ளன எனவும் தெரிவித்தார்.





