ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்க நாங்களாகவே சந்தர்ப்பம் வழங்கிவிடக்கூடாது – மாவை

தமிழ் கட்சிகளுக்குள் இருக்கும் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்க நாங்களாகவே சந்தர்ப்பம் வழங்கிவிடக்கூடாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடர்பில் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிறிகாந்தா தலைமையில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். ஆனால் சிறிகாந்தாவோடு உரையாடும் போது தனக்கு இது தொடர்பில் எதுவித எண்ணமும் இல்லை என கூறியிருந்தார். அதனால் நாம் அதைப்பற்றி பேசத் தேவையில்லை என நினைக்கிறேன்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு வந்ததால் தான் அனந்தி சசிதரன் வெளியேறியதாக அவரது பேட்டி ஊடகங்களில் வெளிவந்தபோதே அறிந்து கொண்டேன். அதை நாம் முதலில் உறுதிசெய்ய வேண்டும். உறுதி செய்யாது ஏட்டிக்குப் போட்டியாக எதையும் கூற நான் விரும்பவில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்து கொண்டமை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் யாரும் எதுவும் கூறவில்லை. எனவே அனந்தி சசிதரன் வெளியேறியமை தொடர்பில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினருடன் கலந்துரையாடவுள்ளோம். எமது ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்க நாங்களாகவே சந்தர்ப்பம் வழங்கக்கூடாது.
அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு செயற்படுவதற்கே நாங்கள் முக்கியத்துவம் வழங்கியுள்ளோம். ஒன்றுபட்டு செயற்படுவதற்கு எமக்கு உள்ள பொறுப்புக்களை நிறைவேற்றுவோம். இன்றைய கூட்டத்தில் பங்குபற்றாத தரப்பினரை இனிவரும் கூட்டங்களில் பங்குபற்ற வைப்பது தொடர்பாக குறித்த தரப்பினருடன் பேசவுள்ளோம், என்றார்.