தென்மராட்சி சிறுவர்களின் முன்மாதிரியான செயல், குவியும் பாராட்டு

தென்மராட்சி சிறுவர்கள் இருவரால் சேகரிக்கப்பட்ட பிளாஸ்ரிக் கழிவுகள் இன்றைய தினம் (19) சாவகச்சேரி நகராட்சிமன்ற பிளாஸ்ரிக் மீளுருவாக்கல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

சாவகச்சேரி நகராட்சி மன்றத்தினால் உக்காத கழிவுப் பொருட்களை சேகரித்து மீள் சுழற்சி முறையில் மீளுருவாக்கம் செய்யும் நிலையம் ஒன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி தரம் 6 மாணவன் அபர்னன், சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி தரம் 5 மாணவன் அ.கரிஷ்யதுர்சன் ஆகியோர் இணைந்து தமது சூழலில் சேகரித்த ஒருதொகுதி பொலித்தீன், பிளாஸ்ரிக் கழிவுகளை சேகரித்து நகராட்சி மன்றப் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் பி.தளிர்றாஜ் முன்னிலையில் கையளித்தனர்.

இதேவேளை சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் இந்த உக்காத கழிவு சேகரிப்பு நிலையத்தில் கழிவுகளை கையளித்து, அங்கு வழங்கப்படும் கழிவு சேகரிப்பு கூப்பன்களை நிரப்பி ஊக்கத் தொகையை பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.