இந்தியா கூட்டமைப்போடு அல்லாமல் தமிழர் தரப்போடு பேச வேண்டும்

இந்தியா வெறுமனே தமிழ் தேசியக் கூட்டமைப்போடு பேசாமல் தமிழர் தரப்போடு பேசினால் வரவேற்கக்கூடிய ஒன்றாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
சமகால அரசியல் தொடர்பில்  பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,  தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் ஆகிய இரு கட்சித் தலைவர்களும் சந்தித்து கருத்துக்களை பரிமாறுவது ஆரோக்கியமான செயற்பாடாகும். இந்த சந்திப்பு எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு பிரியோசனமாக இருந்தால் வரவேற்கக்கூடிய விடயமாகும்.
ஈழ விடுதலைப் போராட்ட காலத்தில் இருந்தே இந்தியா தொடர்ச்சியாக தமிழர் தரப்போடு பேசிக்கொண்டு வருகின்றது. தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்போடு பேசப்போவதாக அறிந்தேன். இச் சந்திப்புக்கள் இணையவழியூடான பேச்சுக்களாக அமையும் என கூறப்படுகிறது.
இந்தியா வெறுமனே தமிழ் தேசியக் கூட்டமைப்போடு பேசாமல் தமிழர் தரப்போடு பேசினால் வரவேற்கக்கூடிய ஒன்றாகும். அச் சந்திப்பு எவ்வாறு நடைபெறப் போகின்றது என்பது பற்றி பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்தியாவுடன் எமது உறவுகளைப் பலப்படுத்த, எமது பிரச்சினைகளை பற்றி பேச சகல கட்சிகளையும் இணைத்து குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என ஏற்கனவே கூறியிருந்தேன். இவ்வாறு ஒரு குழு நியமிக்கப்பட்டால் தமிழர் தரப்பு பிரச்சினைகளை ஒரே குரலில் பேசமுடியும், என்றார்.