யாழ்ப்பாணத்தில் தனியார் வைத்தியசாலைகளினால் உருவாக்கப்படும் உயிர் மருத்துவ கழிவுகள் எவ்வாறு அகற்றப்படுகின்றன என்ற கேள்வி பலரிடத்தில் எழுந்துள்ளது.
உயிர் மருத்துவ கழிவுகள் பேராபத்தை விளைவிக்கக் கூடியது. உயர் மருத்துவ கழிவுகள் எனும்போது சிரிஞ்சுகள், நீடில்கள், கட்டுப்போடும் துணிகள், பஞ்சுகள், கையுறைகள், முகக்கவசங்கள், உடல் உறுப்புக் கழிவுகள், காலாவதியான மருந்துகள், ஆய்வுக்கூடங்களில் இருந்து நுண்ணுயிர்கலந்த கழிவுகள், சத்திரசிகிசையின்போது பயன்படுத்திய பொருட்கள் அடங்கும்.
மருத்துவக் கழிவுகளை அகற்றும் செயல்பாட்டிற்கு, கழிவுகளை அதீத வெப்பத்தில் எரிக்கும் சாம்பலாக்கி (Incinerator) என்று சொல்லப்படும் கருவி அவசியமானது. முக்கியமாக அவ் சாம்பலாக்கிக்கு காற்று மாசைக் கட்டுப்படுத்தும் கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் சாம்பலாக்கி (Incinerator) மூன்று அரச வைத்தியசாலைகளில் மட்டுமே உள்ளது. அதிலும் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் கருவி இல்லை. யாழ்ப்பாணத்தில் இருக்கும் 17 உள்ளுராட்சி சபைகளிடமும் மருத்துவக்கழிவுகளை கையாளும் எந்த ஒரு பொறிமுறையும் இதுவரை இல்லை.
இந்த நிலையில், தனியார் மருத்துவமனைகள் உருவாகும் மருத்துவக் கழிவுகளை மூட்டைகளில் கட்டி, குப்பைகளோடு குப்பையாக கொட்டி விடுகிறார்கள். இதனால் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயமும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பேராபத்தும் தொடர் கதையாகிவிட்டது.
-ராகுலன் கந்தசாமி





