நாட்டை முடக்கி பொருளாதாரத்தை முடக்குவது தான் எதிர்கட்சியினரின் நோக்கம் என விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று(9) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
தென்பகுதியில் இருந்து வடக்கு வருகின்ற அமைச்சர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுகிற அதே வேளை நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற காலத்திலும் கொரோனா அதிகரித்து இருந்தது. ஆனாலும் இப்போது அவர்கள் தங்களது வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டு தான் செல்கிறார்கள். நாங்களும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்.
பொதுமக்களோ, சுகாதார தரப்பினரோ நாடு முடங்குவதை விரும்பவில்லை. ஆனால் எதிர்க்கட்சியினர் முடக்கத்தை விரும்புகிறார்கள். பொருளாதாரத்தை முடக்குவது தான் அவர்கள் நோக்கமாக இருக்கிறது. நாடு முடக்கப்பட்டாலும் அவர்கள் வெளியில் நடமாடுவார்கள். நாங்கள் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம், என தெரிவித்தார்.





