முன்னணி நடுநிலை வகிக்க, ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேசசபை பாதீடு நிறைவேற்றம்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) ஆளுகைக்குட்பட்ட வேலணை பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்குரிய வரவு செலவு திட்டம்(பாதீடு) ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வேலணை பிரதேச சபையினுடைய வரவு செலவுத் திட்டத்திற்கான விசேட கூட்டம் இன்று(11) சபையின் தவிசாளர் ந.கருணாகரகுருமூர்த்தி தலைமையில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 10 உறுப்பினர்களும், எதிராக 9 உறுப்பினர்களும், ஒரு உறுப்பினர் நடுநிலமையாகவும் வாகித்திருந்தனர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 6 உறுப்பினர்கள், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 2 உறுப்பினர்கள், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா ஒரு உறுப்பினர் என மொத்தமாக 10 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினர் என மொத்தமாக 9 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்த்தனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் நடுநிலை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.