வேலைவாய்ப்பு இன்மையினால் பல்வேறு சமூகப் பிறழ்வுகள் ஏற்படுகிறது – யாழ்மாவட்ட அரச அதிபர்

வேலைவாய்ப்பு இன்மையினால் பல்வேறு சமூகப் பிறழ்வுகள் சமூகத்தில் ஏற்படுகிறது. இதனை தடுக்கவும் வறுமை நிலையில் உள்ள இளைஞர் யுவதிகள் தங்கள் குடும்ப நிலையை கட்டியெழுப்புவதற்காக ஒரு லட்சம் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது என, யாழ் மாவட்ட அரச அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

அரசின் ஒரு லட்சம் வேலைவாய்ப்பிற்கு வடக்கில் இருந்து தெரிவு செய்யப்பட்டோருக்கான தலைமைத்துவ பயிற்சியின் ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் “சுபீட்சத்தின் நோக்கு” என்ற செயற்திட்டதத்தின் கீழ் நாட்டில் வறுமைக்குட்பட்டோரிற்கு தொழில் வாய்ப்பு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டதே தேசிய இளைஞர் படையணி ஆகும். இவ் எண்ணக்கருவின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட தேசிய இளைஞர் படையணிக்கான தலைமைத்துவ பயிற்சிகள் இன்று ஆரம்பமாகியுள்ளன.

இதில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 94 பேர் இணைக்கப்பட்டுள்ளார்கள். ஜனாதிபதி பதவியேற்றவுடன் வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதற்காக பல்நோக்கு அபிவிருத்தி செயலணியை உருவாக்கி வறுமையில் உள்ள இளைஞர் யுவதிகளிற்கு பயிற்சிகள் வழங்கி அவர்களை அரச வேலைவாய்ப்பில் இணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

எமது இளைஞர்கள் வறுமைநிலையினால் மத்திய கிழக்கு நாடுகளிற்கு சென்று பல்வேறு துயரங்களுக்கு உள்ளாகிறார்கள். ஒவ்வொருவருக்கும் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற பேதமில்லாது ஏதோவொரு திறமையுள்ளது ஆதலால் இப் பயிற்சிநெறி திட்டமிட்ட வகையில் முறையாக வழங்கப்படுகிறது இதன் மூலம் மிளிர்ந்து உங்கள் குடும்பத்திலிருந்து வறுமையை இல்லாமல் செய்யவேண்டும் என, தெரிவித்தார்