பேரறிவாளனை விடுதலை செய்ய விஜய் சேதுபதி, ஆர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் கோரிக்கை

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாகக் கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா, விஜய் ஆண்டனி, சமுத்திரக்கனி, பார்த்திபன் உள்ளிட்ட தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் தமது கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.

நடிகர் விஜய் சேதுபதி

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து பேரறிவாளன் அண்ணாவை ஆளுநர் அவர்கள் விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அற்புதம்மாள் அவர்களின் 29 வருடப் போராட்டம் இது. ஒரு குற்றமற்றவருக்கு விடுதலை கொடுங்கள் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பை மதித்து பேரறிவாளன் அண்ணாவை விரைவாக விடுதலை செய்ய வேண்டும்.

 

நடிகர் விஜய் ஆண்டனி

நிரபராதியான சகோதரர் பேரறிவாளன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறிய பிறகும் தாமதிப்பதென்பது நீதியல்ல.

 

இயக்குநர் அமீர்

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது. இத் தத்துவத்தின்படி உருவாக்கப்பட்டதுதான் இந்திய தண்டனைக் கோவை. உச்ச நீதிமன்றம் விடுவிக்குமாறு கூறிய போதும் தமிழக சட்டமன்றம் உறுதியளித்த பிறகும் வழக்கைப் பதிவு செய்த காவல்துறை அதிகாரி இந்த வழக்கில் பேரறிவாளனுக்குத் தொடர்பில்லை என்று சொன்ன பிறகும் கூட 25 ஆண்டுகளுக்கு மேலாக நிரபராதி பேரறிவாளன் சிறையில் வாழ்ந்து கொண்டிருப்பது கொடுமையான விஷயம்.

 

நடிகர் ஆர்யா

நீதி, நியாயம், சட்டம், தர்மம் அத்தனையும் தாண்டி கால் நூற்றாண்டு கடந்தும் கண்ணீரோடு போராடும் ஒரு தாயின் தவிப்பைப் பாருங்கள். சிறை தண்டனையில் அல்லாடுவது பேரறிவாளன் மட்டும் அல்ல, தாய் அற்புதம் அம்மாளும்தான்.

இயக்குநர் சமுத்திரக்கனி

அறிவின் அப்பாவின் உடல் நலன் விசாரித்தேன். மிகவும் கவலை அளிக்கிறது. மாண்புமிகு முதல்வரே, மேதகு ஆளுநரைச் சந்தித்து அறிவின் விடுதலை கோப்பில் உடனே கையெழுத்து பெற்றிடுக.

நடிகர் பிரகாஷ் ராஜ்

தீர்ப்புக்குப் பின்னும் மறுவிசாரணைக்கான சட்டங்கள் நம் நாட்டில் இருக்குமானால், இந்த அதிகாரியின் வாக்குமூலத்தையடுத்து பேரறிவாளன் சட்டப்படி குற்றமற்றவராக விடுதலையாகி இருப்பார். ஆனால் அவருடைய விடுதலைக்காக நடைமுறையில் இருக்கும் சட்டங்களையே நம்பவேண்டியிருக்கிறது. ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது. பேரறிவாளனை விடுதலை செய்யுங்கள்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

ஒரு குற்றமும் செய்யாதவருக்கு 30 ஆண்டுகள் சிறை. தனது மகனைத் திரும்பப் பெற ஒரு தாயின் 30 வருடப் போராட்டம். இவர்களுக்குத் தமிழக முதல்வர், ஆளுநர் நீதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம். தயவுசெய்து இனியாவது தாயும் மகனும் ஒரு சுதந்திரமான வாழ்க்கையை வாழ விடுங்கள்.

நடிகர் பார்த்திபன்

அற்புதம் அம்மாள் நீதித்துறையின் பொற்பாதம் பிடிக்காதக் குறையாக கடந்த வருடங்களில் அவர் நடந்த தூரமும்,துயரமும் அளவிட முடியாதது. விடுதலையில் நியாயமும் தர்மமும் இருப்பதால்,அது உடனடியாக நிகழ வேண்டி போராடும் நல்லிதயங்களில் நானும் ஒருவன்.

அற்புதம் அம்மாள் நீதித்துறையின் பொற்பாதம் பிடிக்காத குறையாக கடந்த வருடங்களில் அவர் நடந்த தூரமும் துயரமும் அளவிட முடியாதது. விடுதலையில் நியாயமும் தர்மமும் இருப்பதால், அது உடனடியாக நிகழ வேண்டி போராடும் நல்லிதயங்களில் நானும் ஒருவன்.

 

ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், நடிகை ரோகிணி, இயக்குநர்கள் பா. இரஞ்சித், சிம்புதேவன், நவீன் உள்ளிட்ட பலரும் பேரறிவாளனின் விடுதலைக்காக சமூகவலைத்தளங்களில் தமது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்கள். மேலும் பலரும் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

(தினமணி)