30 வருட கால கொடிய போரில் துயருற்ற எமது மக்கள் அக்காலத்தில் கூட உணவு பஞ்சத்தால் உயிர் நீத்த சம்பவங்கள்ஏதும் பதிவாகவில்லை என்பதை யாழ்ப்பாணம் தலைமைகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ நினைவில் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் உணவுப் பழக்கவழக்கத்தை இழிவுபடுத்தும் வகையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கருத்து தெரிவித்த யாழ்ப்பாணம் தலைமைகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கருத்து தொடர்பில் அவரது ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கடந்த காலங்களில் இடம்பெற்ற போர் சூழலில் உயிர்நீத்த தமிழ் உறவுகளுக்களுக்கான நினைவேந்தலை தடைசெய்ய கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் முன்னிலையாகிய யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தமிழ் மக்களின் உண்ணும் உணவுகளை கொச்சைபடுத்தும் முகமாக “சோறும், புட்டும், வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம்” என நீதிமன்றில் கூறியிருந்தார்.
30 வருட கால கொடிய போரில் துயருற்ற எமது மக்கள் அக்காலத்தில் கூட உணவு பஞ்சத்தால் உயிர் நீத்த சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இலங்கை நாட்டில் வாழும் மூவின மக்களையும் ஒரே சட்டத்தால் பரிபாலிக்கும் பொலிஸ் துறையில் உயர் பதவியில் இருப்பவர்கள் இன ஐக்கியத்தை குழப்பும் வகையிலும் தமிழ் மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் கருத்து கூறுவதைத் தவிர்த்து கொள்ள வேண்டும்.
கடந்த காலங்களில் தமிழ் மக்களை தேர்தலின் போது உசுப்பேத்தி அரசியல் சுயலாபம் தேடுகின்ற அரசியல்வாதிகளுக்கு இவ்வாறான கருத்துக்கள் எதிர்வரும் காலங்களில் மக்களை ஏமாற்றுவதற்கு பக்க பலமாக அமைந்து விடும், என அவ் அறிக்கையில் உள்ளது.
சோறும், புட்டும் சாப்பிட்ட மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம் – பிரசாத் பெர்னாண்டோ





