யாழை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் இல்லை, மக்கள் குழப்பமடைய வேண்டாம் – கேதீஸ்வரன்

யாழ்ப்பாண குடாநாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் இல்லை. எனவே பொதுமக்கள் குழப்பமடைய தேவையில்லை என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணக் குடாநாட்டை முடக்குவது தொடர்பில் தீர்மானம் என இன்றைய பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன. எனினும் அது பிழையான செய்தி. குடாநாட்டை முடக்குவது தொடர்பில் இதுவரை எந்த எந்த ஒரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை.

குறிப்பாக காரைநகர் பகுதியில் கொழும்பிலிருந்து வருகை தந்த ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் காரைநகர் பகுதியில் அவரிடம் நேரடியாக தொடர்புகளைப் பேணிய 21 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

அவர்களுக்கு நாளைய தினம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.அந்த பிசிஆர் பரிசோதனை முடிவில் பலருக்கு தொற்று இனங் காணப்பட்டால் மாத்திரமே சில வேளைகளில் காரைநகர் பிரதேசம் மாத்திரம் முடக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.

எனினும் அது தொடர்பில் தற்போது வரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை. பத்திரிகை செய்திகளை வைத்து பொது மக்கள் குழப்பமடைய தேவையில்லை என தெரிவித்தார்.