வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், பொலிஸார் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரும் எதிர்பார்க்கை பிணை விண்ணப்பத்தை நாளைமறுதினம் புதன்கிழமை பரிசீலனைக்கு ஒத்திவைத்த மல்லாகம் நீதிமன்று அச்சுவேலிப் பொலிஸாருக்கு அறிவித்தல் அனுப்ப உத்தரவிட்டது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அச்செழு அம்மன் கோவில் வீதியை சீரமைக்கும் பணியை ஆரம்பித்து நடப்பட்ட திட்ட பெயர்ப்பலகை நடப்பட்டது. அது வலி. கிழக்கு பிரதேச சபையின் அனுமதி பெறப்படாது நடப்பட்டது என தவிசாளர் தியாராஜா நிரோஷ் பணிப்பில் பெயர்ப் பலகை கடந்த வாரம் அகற்றப்பட்டிருந்தது.
“பெருந்தெருக்கள் அமைச்சினால் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 100 லட்சம் கிலோ மீற்றர் வீதிகளை சீரமைக்கும் திட்டத்தில் அதனை நடைமுறைப்படுத்தும் வீதி அபிவிருத்தி அதிகார சபை, எந்தவொரு வீதியிலும் திட்டத்தின் பெயர்ப்பலகையை நடுவதற்கு அதிகாரம் உண்டு என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்தச் சுற்றறிக்கையை கவனத்தில் கொள்ளாது வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர், அச்செழு அம்மன் ஆலய வீதியில் நடப்பட்ட பெயர்ப்பலகையை அகற்றி அரச சொத்தைச் சேதப்படுத்தியுள்ளார்” என்று அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் முறைப்பாடு வழங்கப்பட்டது.
இது தொடர்பில் தியாகராஜா நிரோஷிடம் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை வாக்குமூலம் அச்சுவேலி பொலிஸார் பெற்றிருந்தனர். அதில் அவர் பெயர்ப்பலகையை அகற்றியதற்கான தனது விளக்கத்தை வழங்கியிருந்தார். அத்துடன், அகற்றிய பெயர்ப்பலகையையும் அவர் பொலிஸாருக்குக் காண்பித்திருந்தார்.
இந்த நிலையிலேயே அரச சொத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் இன்று திங்கட்கிழமை அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்ய சபையின் தலைமையகத்துக்குச் சென்றிருந்தனர். இன்று காலை முதல் மாலை வரை அவர் சபைக்கு சமூகமளிக்காததால் பொலிஸாரும் திரும்பிச் சென்றனர்.
இந்த நிலையில் வலி. கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர், தியாகராஜா நிரோஷை அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்யவதைத் தடுக்கும் விண்ணப்பம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் அவரது சட்டத்தரணிகளால் தாக்கல்செய்யப்பட்டது.
தவிசாளர் கைது செய்யப்படுவது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று குறிப்பிட்டு சட்டத்தரணிகள் விஸ்வலிங்கம் திருக்குமரன், விஸ்வலிங்கம் மணிவண்ணன், சுபாஸ்கரன் உள்ளிட்டோர் மன்றில் தமது சமர்ப்பணத்தை முன்வைத்தனர்.
அதனை ஆராய்ந்த மன்று விண்ணப்பத்தை நாளை மறுதினம் பரிசீலனைக்கு எடுக்க திகதியிட்ட மல்லாகம் நீதிமன்றம், அன்றைய தினம் அச்சுவேலி பொலிஸாரை மன்றில் முன்னிலையாக அறிவித்தல் அனுப்ப உத்தரவிட்டது.





